தமிழர் அழிப்பின் முத்திரை கறுப்பு யூலை

சிறீலங்கா சிங்கள இனவெறியரால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொடிய இன அழிப்பால் பல மனித அவலங்களைச் சந்தித்திருக்கின்ற போதும் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் முகம்கொடுத்த கூட்டுப்படுகொலைக்களமானது தமிழ் மக்கள் அனைவரதும் உள்ளங்களிலும் அழியாத வடுவாக பதிந்துள்ள நினைவுகளாகும். சிங்களம் தனது கொடிய இனவெறி கோரத்தாண்டவத்தை தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொடிய நாட்களாகும். தமிழர்கள் தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் நிலைப்பாடு அவசியமே என உணர்த்திய நாட்களாகும்.
இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால், 1983ல், இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை. சிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர். தமது கடுமையான உழைப்பால் தமிழர்கள் சேர்த்துவைத்த வளங்களை, செல்வங்களை, சொத்துக்களை, சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டனர். தீவைத்து மகிழ்ந்தனர். தமிழ்மக்களின் பொருளாதார வளம் முற்றாக அழிக்கப்பட்டது.
வெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்றுபேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். குட்டி மணியின் தமிழீழ விடியலைக்காண வேண்டும் என்ற கண்கள் பிடுங்கி வீசி எறியப்பட்டது.
சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர்.
தமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த சிங்கள அரசு, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் சுயாதீனமான நீதி விசாரணைக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது. மாறாக, வெலிக்கடைச்சிறையிலும், ஏனைய பகுதிகளிலும், இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்களக் காடையர்களுக்கு, வீடுகள், வசதிகள் வழங்கி, தமிழர்தாயகப்பகுதியில் குடியேற்றியது சிங்கள அரசு.
இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்புயூலைக் கொடுமைகளை தட்டிக்கேட்க மறந்த, சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கே, இன்று பன்மடங்கு கொடூரத்தை, கொடுமையை எம்மினம் முள்ளிவாய்க்காலில் அனுபவிக்கநேர்ந்தது. இத் தொடர் தமிழின அழிப்பு வரலாற்றில் முள்ளிவாய்க்கால் இனப்படுக்கொலைக்களமும் இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பி நிற்கிறது. சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளானது பல சர்வதேச நாடுகளின் கவனத்தையும் தமிழர்கள் மீது ஈர்த்துவருகிறது. இருந்தும் இவற்றிற்கான தீர்வுகள் என்ன என்பதை சிறீலங்கா அரசிற்கு அளித்துவிடவில்லை எந்த சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களும்.







நோர்வேயில் தொழிற்கட்சி முகாமுக்காக இளைஞர்கள் கூடியிருந்த குட்டித் தீவு ஒன்றில் நோர்வே நாட்டை சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் சராமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்..
வடகிழக்கு இணைந்த தீர்வையே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அம்பாறை மாவட்டத்தில் நடந்த உள்ளுராட்சி தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். .








